<<>>சர்வ தேசியவாதி.....!<<>>



கோட்னிஸ் உதவியதன் அடிப்படை, மனிதநேயம் ஆகும்.

அது ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகள் கருதாதது.

நாடு விட்டு நாடு சென்று உதவுதல் என்பதற்கு மாபெரும்

எடுத்துக்காட்டு....... கோட்னிஸ் ஒருவரே!


மனித நேயத்தோடு துணிவும் உழைப்பும் இருந்ததால்தான்

இன்றும் அவர் சீனாவில் நினைவுகூரப்படுகிறார்.


நமது பாடப்புத்தகங்களில் அவரது மனிதநேயப் பணிகளை

இடம்பெறச் செய்ய வேண்டும்.


இளைய தலைமுறைக்கு அவரின் சேவைகள் முன்மாதிரியாய், வழிகாட்டியாய் அமைய வேண்டும்.


""கரும்பாலையிலுள்ளவனுக்குக் காய்ச்சல் என்றால்

ஊட்டியிலுள்ளவனுக்கு வியர்க்க வேண்டும்'' என்றான் ஒரு கவிஞன்.


""அண்டை வீட்டாரிடம் நேயம் பாராட்டுங்கள்'' என்றார் நபி பெருமான்.


இதற்கு இலக்கணமாக அண்டை நாட்டினர் இடமே நேயம் பாராட்டிய

டாக்டர் கோட்னிஸ் உலகிற்கே ஓர் "உதாரண புருஷர்'.


அண்டை வீட்டாரின் முகவரியே தெரியாது என்கிற

பெருநகர மக்களுக்கும், மக்கள் பிரச்சினைகளில் முரண்டு

பிடிக்கும் மாநிலங்களுக்கும், மனித நேயமற்று போர்

தொடுக்கும் உலக நாடுகளுக்கும் அவர் ஒரு சிறந்த

எடுத்துக்காட்டு.



மருத்துவர் கோட்னிஸ், நட்பின் உருவகம் மட்டுமல்ல; சர்வதேசியவாதியுமாவார்.


அவரது தியாக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில்,

பாசிசத்துக்கு எதிரான யுத்தத்தில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கான

போராளித் தியாகிகளின் கல்லறைகள் அருகே அடக்கம்

செய்யப்படுவதாக, சீன மக்கள் ராணுவத்தின் தலைமைத் தளபதி சூடே அறிவித்தார்.


""கொடிய அடக்குமுறைப் பாசிசத்துக்கு எதிரான மக்கள்

விடுதலைப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தாலும்,

எனது இந்திய மக்கள் பெருமை கொள்வார்கள்'' என்று

தனது துணைவியார் குவோ குயிங்லேனிடம் கோட்னிஸ்

நம்பிக்கை தெரிவித்தார்.


அவரது நினைவைப் போற்றும் நிகழ்வுகள், அவரது நம்பிக்கை

வீண் போகவில்லை என்பதையே காட்டுகின்றன.


முப்பத்திரெண்டு அகவைக்குள்ளே அவர் ஆற்றிய அரும்பணி

ஆச்சரியப்பட வைக்கிறது.


"வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருப்பதே, ஒரு பெரிய அதிர்ஷ்டம்' என வியந்துரைத்தவர் அறிஞர் ஸ்டீவன்சன். இக்கால மருத்துவர்களில் பெரும்பாலோர், பணம் சேர்ப்பதே பெரும்பணியாகக் கொண்டுள்ள நிலையையும் பார்க்கிறோம். சமூக அக்கறையும் மனிதாபிமானமும் மிக்க மருத்துவர்கள் பெருக வேண்டும்; காலந்தான் கருணை காட்ட வேண்டும்.